அப்பா,நைனா,வாப்பா,dad,pops……

2007 தந்தையர் தினமன்று பதிந்து கொண்டது, திரும்பவும் எடுத்துப் போடத் தோன்றியது….

2007 தந்தையர் தினமன்று பதிந்து கொண்டது, திரும்பவும் எடுத்துப் போடத் தோன்றியது….

காலம் போகிற போக்கைப் பார்த்தால், சில நூற்றாண்டுகளில் தந்தையைக் குறிக்கும் “அப்பா,நைனா,வாப்பா,dad,pops ” போன்ற வார்த்தைகளுக்கும் அவை சுட்டும் அஃறிணைகளுக்கும் (!?) அர்த்தம் இல்லாமல் போய்விட வாய்ப்புகள் வெகுவாக உள்ளன. கூடிவாழும் இரு பெண்கள் செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள். அண்மைய உதாரணம், அமேரிக்க துணை அதிபர் டிக் சேனியின் மகள். சேர்ந்து வாழும் ஓரின ஆண்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்கிறார்கள் சிலர். ‘நாகரீக உலகம்’ நாகரீகத்தின் உச்சக்கட்டத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், நாகரீகத்தின் அடிப்படைகள் கூட தெரிந்திராத என் போன்ற ஆட்களின் தினம் இன்று, “தந்தையர் தினம் “.

34 வருட வயது வேறுபாடு இருந்தும், மகனும் தானும் நண்பர்களாக இருந்து, வளர்ந்து வரும் பெரும் பாக்கியத்தைப் பெற்றவன் இப்பதிவின் வலைப்பதிவன். ஒரு அற்புதமான அமேரிக்க காலை நேரத்தில், சரியாக 11.11 மணிக்கு, தனது அப்பாவை போலவே 9 பவுண்ட் எடையில் குண்டு குழந்தையாகப் பிறந்து, தற்போது மீசை அரும்ப ஆரம்பித்திருக்கும் ஒரு மகனுக்கு, வருடா வருடம் தந்தையர் தினமன்று அப்பாவுக்கு என்ன புதிதாக பரிசளிப்பதென்பது சவாலாகவே இருந்து வருகிறது; அப்பாவின் தேவைகள் வெகு குறைவு என்பதாலும் இருக்கலாம். தமிழ் நூல்கள் அல்லது டென்வர் ப்ராங்கோஸ் சம்பந்தப்பட்ட பரிசுகள் என குறுகலான தெரிவுகள் மட்டுமே இருப்பது மகனுக்கு இக்கட்டையே கொடுத்து வந்துள்ளது . இதுமட்டுமில்லாமல் கடந்தவருட தந்தையர் தினமன்று, விருப்பமில்லாமல் அயல்நாட்டில் இருக்க வேண்டியிருந்தது, மகனுக்கு கண்ணீரையும் வரவழைத்திருந்தது.

பிறந்தநாளையெல்லாம் பெரிதாக கருதாத இத்தந்தைக்கு, தந்தையர் தினம் சொல்லவொண்ணா பெருமகிழ்ச்சியை வருடாவருடம் தந்து கொண்டுள்ளது. ‘மகன் என்ன பரிசு வாங்கி தருவார்’ என தந்தையானவன் குதூகலத்துடன் நினைத்துப் பார்த்து அகமகிழ்ந்ததுமுண்டு. போனவருடம் ப்ராங்கோஸ் சின்னம் தரித்த மேற்சட்டை,

Photo Sharing and Video Hosting at Photobucket

அதற்கு முந்தைய வருடம் ப்ராங்கோஸ் தொப்பி என தந்தையர் தின பரிசுகளை பெற்றதால் இந்த வருடம் ப்ராங்கோஸ் சம்பந்தப்படாத பரிசு கிடைக்கும் என்றொரு உத்தேசமிருந்தது. கடந்த இரு வருடங்களில் ஒரு நூற்றுக்கும் மேலான தமிழ்நூல்களை வாங்கிவிட்டதால் புதிதாக ஏதோ பரிசு கிடைக்கும் என்றொரு நம்பிக்கையுமிருந்தது.

நடுநிசி வரை இந்திய உறவினர்களிடம் தொலைபேசியில் பேசிவிட்டு, அப்பாவை மூன்று சுற்றுகள் ”எட்டு பந்து ” (pool – billiards போன்று) ஆட்டத்தில் தோற்கடித்துவிட்டு உறங்கச் சென்ற மகன் காலை 9.30 மணி அளவில் எழுந்து, கீழே இறங்கி வர 10 நிமிடம்தான் ஆனது. என்னடா இது! எப்போதும் குளிக்க அரை மணிநேரமாவது எடுத்துக் கொள்ளும் மகன் உடன் கீழ் இறங்கி வந்து விட்டார் என அப்பாவானவன் திரும்பிப் பார்த்தால், Happy Father’s Day அப்பா ! என தோழமையும், அன்பும் பொங்கும் முகத்தினனாக ஒரு சிறு ப்ளஸ்டிக் பையை கொடுத்தார் மகன் !

சில வருடங்களுக்கு முன்பு மகனுக்கு கதை சொல்லி தூங்கி வைத்த ஒரு இரவில், தந்தையின் இந்திய கதைகளிலொன்று – ‘இந்தியாவில் பார்த்த சினிமா படங்கள், படங்கள் பார்க்கப்பட்ட ஊர்கள், கொட்டகைகள்’ !! மூட்டைப் பூச்சி கடிக்கும் பிரம்பு நாற்காலியில் தவிக்க முடியாமல் தவித்துக் கொண்டு படம் பார்த்தது, 32 காசுக்கு தரையில் உட்கார்ந்து படம் பார்க்கச் சென்று நண்பன் பாலுவுடன் லூட்டி அடித்தது மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களை பார்ப்பதற்காகவே பாண்டிச்சேரி உறவினர் வீட்டுக்கு போவதுண்டு என்பன போன்றவை அடங்கியிருந்த கதையது.

பாண்டியிலுள்ள ரத்னா கொட்டகையில் பார்த்த ஆங்கிலப் படங்கள் பற்றி, தந்தை சொல்லியிருந்ததை நினைவில் வைத்திருந்த மகன் கொடுத்த ப்ளஸ்டிக் பையை விலக்கிப் பார்த்தால், ” Planet of the Apes ” படத்தின் மூன்று குறுந்தட்டுகளடங்கிய பெட்டி இருந்தது. கடந்த பல வருடங்களில் நாலைந்து தடவை தொலைக்காட்சியில் பார்த்திருந்தாலும் அவப்போது வேண்டும் போதெல்லாம் பார்த்து மகிழக்கூடிய வகையைச் சார்ந்த படம் இது, தமிழில் பராசக்தி,உதிரிப்பூக்கள்,நாயகன்,மகாநதி,அழியாத கோலங்கள் போன்று..

Photo Sharing and Video Hosting at Photobucket

30 சொச்ச வருடங்களுக்கு முன்பு ரத்னா கொட்டகையில் முதன்முதலாக பார்த்த போது உண்டான பரிச்சயம் இன்னும் விட்டு போகவில்லை. டோக்டர்.செயஸ், கோர்னிலீயஸ் மற்றும் லூசியஸ் நினைவைவிட்டகலாத கதாபாத்திரங்கள். முக்கியமாக, டோக்டர்.செயஸை நினைவூட்டும் உலகத்தலைவர்கள் ஒரிருவர் தற்போதிருப்பது செயஸை நினைவிலேயே வைத்துக் கொண்டுள்ளது.

அற்புதமான பரிசை வாங்கிதந்த மகனுக்கு நன்றி கூறும் விதமாக ஷெரெக் 3 படத்திற்கு இம்மாலை அவரை அழைத்துச் செல்ல வேண்டும், திரும்ப வந்து நேரமிருந்தால் Planet of the Apes ன் முதல் தட்டை போட்டு மகனுடன் பார்த்து ரசிக்க வேண்டும்.

வெளியே வெயில் 93 ஐ தாண்டினால் என்ன.. மனம் முழுவதும் குளிர்ந்து போய் கிடக்கிறது, முழுநிறைவுடன்.

2011: வலை விற்பனை மனையொன்றில் தாமதமாக வாங்கப்பட்ட ஒரு சதை காலணி, தந்தையர் தினப் பரிசாக விரைவில் வந்து சேரும், சற்றுமுன் மகன் சொன்னது.. வலையில் இதுவரை காலணி வாங்கியதில்லை…