ஜோடி வெங்கடேசன்

’ஜோடி வெங்கடேசன்’ என்றவுடன் ஏதோவொரு தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்லது புது திரைப்படத் தலைப்பு என நினைத்துவிட வேண்டாம். உயிரே போகிற விதயமானாலும் – ஒன்றுக்கும் உதவாத விதயமானாலும் சரி, எடுத்ததெற்கெல்லாம் சினிமாவை ஒப்பிடும் பெருமை வாய்ந்தது தற்போதைய தமிழ்க் குமுகாயம் . எச்சரிக்கையாக ஒரு விளக்கக் குறிப்பு. Jody என்பது அமேரிக்காவில் ஓரளவு பரவலாய் உள்ள ஆண்பால் பெயர். Jodi(e) பெண்பால் பெயர். மற்றும் இப்பதிவின் நாயகர் பெயர் ஜோடி வெங்கடேசன்.

ஜோடியின் தந்தை ஷேன் வெங்கடேசன் புலம் பெயர்ந்த தமிழர். நியு யோர்க் மாநிலத்தில் பிறந்த ஜோடி, அமேரிக்க ராணுவத்தில் பணி புரிந்தவர். படிப்பறிவால், திறமையால் தலைமை கணக்காளர். அவர் சார்ந்துள்ள கிருத்துவ கோவிலில் டீக்கன் ஆக இருப்பவர். மூன்று குழந்தைச் செல்வங்களைப் பெற்ற ஜோடி, மனைவி லோவிஸ் உடன் மேரிலாந்தில் வாழ்ந்து வருகிறார். நாட்டுப்பற்றிலும் மக்கள் சேவையிலும் ஈடுபாடுள்ள ஜோடி, மேரிலாந்து மாநில செனட் ற்கான 13 வது மாவட்ட குடியரசு கட்சி வேட்பாளராக வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

jody V 1

பொருளாதாரம் தறிகெட்டு ஓடிக் கொண்டுள்ள நிலையில், மேரிலாந்து மாநிலம், ஜோடி போன்ற அரசியல் எளிமையாளர்களை அரசாளும் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அமேரிக்க அரசியலில் தெற்காசிய பின்புல வேட்பாளார்கள் வெகு அபூர்வமாய் ஈடுபட்ட காலம் போயே போய்விட்டது. பெரும்பான்மையாக வசிக்கும் மாநிலங்கள் என்றில்லாமல், குறைந்த எண்ணிக்கையிலிருக்கும் ஊர்களில் கூட தெற்காசியர்கள் ஆர்வத்துடன் அரசியலில் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர். வெகுவாக வரவேற்கப்பட வேண்டிய மாற்றம். அரசியல் என இல்லாமல் ஊடக செய்தித்துறைகளிலும் தெற்காசியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சி என் என் ல் – ஃபரிட் ஸேக்கேரியா, அலி வெல்ஷீ, சஞ்சய் குப்தா, பொதுத் தொலைக்காட்சியின் ஹரி சீரினிவாசன் மற்றும் ஞாயிறு காலை அரசியல் அலசல் _கூச்சல் நிகழ்ச்சிகளில் தெற்காசிய பின் புலங்களுடனான ரமேஷ் பொன்னுரூ போன்றோர் பங்கேற்பது சாதாரணமாகிவிட்டது.

இச்சூழலில் ஜோடி வெங்கடேசன் போன்றவர்களை அமேரிக்கத் தமிழர்கள் ஆர்வத்துடன் ஆதரிக்க முன்வர வேண்டும். முக்கியமாக கிழக்குக்கரை மும்மாநில அமேரிக்கா வாழ்தமிழர்கள் ஒன்றிணைந்து, முடிந்த அளவு கொடை அளிக்க வேண்டும்; வேட்பாளருக்கு ஆதரவான பேச்சாடல்களில் ஈடுபட வேண்டும். படிப்படியாக அமெரிக்காவில், “தமிழர்கள்” தங்களுக்கென ஒரு இடத்தை நிறுவ முடிந்தால், நம் ஈழச்சகோதர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அவலங்களுக்கு, நம்மின மக்களுக்கு சொல்லொண்ணா இன்னற் விளைவித்த எதிரிகளுக்கு, எதிரிகளுக்கு உதவிய நாடுகளுக்கு பாடம் கற்பிக்க வழி பிறக்கலாம். வரும் காலமாவது ஈழத்தமிழனுக்கு அமைதியாக அமைய வழி வகுக்கலாம். நினைக்கவே பெரும் மலைப்பாய்த் தோன்றினாலும், இது நிகழ்த்தக்கூடியதுதான். கவனமாக காய்களை நகர்த்தினால் செய்ய முடியாதது இல்லை.

ஜோடி வெங்கடேசனின் அண்மைய பேச்சு – காணொளி:

httpv://www.youtube.com/watch?v=NbTjp0STcrw